திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி கேதாண்டபட்டி பகுதியில் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஆண்டு கரும்பு உற்பத்தி குறைவாக இருப்பதாக கூறி அரசு ஆலையில் அரவையை நிறுத்தியது. ஆனால் இந்த ஆண்டு போதிய கரும்பு இருந்தும் தவறான தகவலின் அடிப்படையில் அரசு ஆலையின் அரவையை நிறுத்த உத்தரவிட்டு கரும்பை வேலூர் மற்றும் அரூர் கூட்டுறவு சர்க்கரை அலைகளுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் நாட்றம்பள்ளி கேதாண்டபட்டியில் உள்ள சர்க்கரை ஆலை பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், விவசாயிகள் என்று 100க்கும் மேற்பட்டோர் சர்க்கரை ஆலை அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது அவர்கள், சர்க்கரை ஆலை அரவை தொடங்கவும், பிறபித்துள்ள அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும், அரசுக்கு தவறான தகவல் கொடுத்த தனியார் ஆலைக்கு சாதகமான செயலில் ஈடுபட்டு வரும் கரும்பு அபிவிருத்தி அலுவலர் வெற்றிவேந்தனை பணிமாற்றம் செய்யவேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு, நாட்றம்பள்ளி வட்டாட்சியர் சுமதி மற்றும் நாட்றம்பள்ளி காவல்துறையினர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: 20% போனஸ் வழங்கக்கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்!