திருப்பத்தூர்: வாணியம்பாடி சென்னம்பேட்டையை சேர்ந்தவர் இதிரீஸ். இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவரது தாயின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நியூடவுன் பகுதியிலுள்ள சதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
அப்போது அவருடைய தாயை பார்க்க மருத்துவமனைக்குச் சென்ற அவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் வெளியே வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது.
அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தபோது அதில் அடையாளம் தெரியாத ஒருவர், இருசக்கர வாகனத்தின் பூட்டை (Side Lock) உடைத்து வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இச்சம்பவம் குறித்து இதிரீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் மார்ச் 08ஆம் தேதி காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக ஒருவர் இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்துள்ளார். அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர் லாலா ஏரி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் தள்ளிக்கொண்டு வந்த இருசக்கர வாகனம், இதிரீஸ் வாகனம் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர், உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: குமரி சட்டக்கல்லூரி மாணவர் படுகொலை: நெல்லையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டதால் பரபரப்பு