திருப்பத்தூர்: ப.முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர், பன்னீர் மகன் சந்திரன் (44). இவர் பெங்களூரில் பில்டிங் காண்ட்ரக்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் பெங்களூரிலேயே வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், திருவிழா நாட்களில் மட்டுமே இவர்கள் சொந்த ஊருக்கு வந்து செல்வதுண்டு என கூறுகின்றனர்.
மேலும், அதே பகுதியில் உள்ள சந்திரனின் மாமியாரான துளசி (50) சந்திரனின் வீட்டை பராமரித்து வருகிறார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் சிலர், நேற்று (நவ.13) இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த 28 சவரன் தங்க நகை மற்றும் 500 கிராம் வெள்ளி மற்றும் ரூ.1,500 பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
மேலும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் மீது துணியை மூடி இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், இன்று காலை மீண்டும் வீட்டை சுத்தம் செய்ய வந்த துளசி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, சந்திரனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில், சந்திரன் திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அந்த தகவலில் பேரில், திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் நிர்மலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, திருட்டுச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருப்பத்தூரில் சில தினங்களுக்கு முன்பு 45 சவரன் தங்க நகை மற்றும் ஒன்பதரை லட்சம் பணம் திருடு போன சம்பவம் அரங்கேறியது.
அதனைத் தொடர்ந்து, தற்போது இன்று இந்த திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் பீதி அடைந்துள்ளனர். இதனால் இரவு நேரங்களில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.