திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அதே ஊரைச் சேர்ந்த 52 வயதான விவசாயி ஒருவர் மற்றும் 70 வயது முதியவர் ஆகிய இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட அப்பெண், இது குறித்து பெற்றோரிடம் கூறி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து பெற்றோர், பெண்ணை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளனர். அப்போது பெண் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இது குறித்து பெற்றோர் மகளிடம் விசாரித்தபோது குறிப்பிட்ட இரு நபர்களும் ஆகியோர் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறி உள்ளார்.
உடனடியாக பெண்ணின் பெற்றோர், வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 5ஆம் தேதி புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமும் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சாந்தி விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே, இந்த தகவல் ஊர் பிரமுகர்களுக்கு தெரிந்ததைத் தொடர்ந்து, கிராமத்தைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று புகாரை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், இது சம்பந்தமாக ஊரில் பஞ்சாயத்து பேசி ஒரு நல்ல தீர்வைக் காண்பதாகவும் காவல் நிலையத்தில் கூறி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் சாந்தி, புகார் மனுதாரரை ஊர் பிரமுகர்களிடம் பேசி வரும்படி அனுப்பி உள்ளார். ஊரில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா ரூ.4 லட்சம் அளிக்க வேண்டும் என ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்து உள்ளனர்.
இந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் ஒருபுறமும், ஊரில் அபராதம் விதிக்கப்பட்ட மனவேதனையில் இருந்தவர்களில் ஒருவர் நேற்று (அக்.7) காலை தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனைத் தொடர்ந்து வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்.
அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட பெற்றோர் அளித்த புகாரின் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிக்கு உத்தரவிட்டார். புகாரில் குறிப்பிட்டு இருந்த இருவரில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து ஒருவர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த சாந்தியை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக மகளிர் காவல் நிலைய பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கவும், அந்த பணியிடத்தில் நாட்றம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் மலரை அனைத்து மகளிர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக நியமித்தார்.
இதையும் படிங்க:ராஜஸ்தானில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவு! காங்கிரஸ் அரசு போடும் திட்டம் என்ன?