திருப்பத்தூர்: வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே பிரபல ஸ்வீட் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 11 மணியளவில் வழக்கம்போல் கடை செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவர்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர்.
இதில் மூன்றுக்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டுகள் கடைக்குள் வீசப்பட்ட நிலையில், அதில் ஒரு பெட்ரோல் குண்டு மட்டும் வெடித்து சிதறியுள்ளது. அப்போது கடையில் ஊழியர் ஒருவர் மட்டுமே இருந்த நிலையில், அதை தடுக்க முயன்ற அவரை மிரட்டி, அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஸ்வீட் கடை தீப்பற்றி எரியத் தொடங்கிய நிலையில், கடையில் இருந்த ஊழியர் நந்தகுமார் தீயை அணைக்க முயன்றுள்ளார். இதனால் அவருக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கிருந்த பொதுமக்கள், இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், கடையில் பற்றிய தீயை அணைத்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர், கடையின் மீது வீசப்பட்டு வெடிக்கமால் இருந்த இரண்டு பெட்ரோல் குண்டுகளை மீட்டனர்.
அதனைத் தொடர்ந்து கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற மர்ம நர்கள் யார், எதற்காக இதை செய்தார்கள், முன்விரோதம் ஏதேனும் உள்ளதா என பல கோணங்களில் வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருடுபோன வீட்டில் போலீசார் சோதனை..திருடிய நகைகளை திரும்ப வீசிச் சென்ற மர்ம நபருக்கு வலைவீச்சு