திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில், கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தற்காலிக காய்கறி சந்தை உருவாக்கப்பட்டு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு (ஆகஸ்டு 27) அடையாளம் தெரியாத நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் அனைத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுபோன்ற கொள்ளை சம்பவம் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது. காய்கறிகளை கொள்ளை அடித்து செல்வது அப்பகுதியில் தொடர்ந்து நடைபெறுவதால் காய்கறி விற்பனையில் ஈடுபடுவதற்கு வியாபாரிகள் மிகுந்த அச்சப்படுகின்றனர். மேலும் இதுவரையில் ஒரு லட்சம் மதிப்பிலான காய்கறிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் கொடுத்த புகாரின் பேரில் வாணியம்பாடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.