திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியம் கிரிசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்டு நெக்னா மலைக்கிராமம் உள்ளது. இந்த மலைக்கிராமமானது தரை மட்டத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தூரமும் ஆயிரத்து 200 அடி உயரமும் கொண்ட மலையாகும்.
மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், கல்வி, மருத்துவம், ரேஷன் பொருள்கள் போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல், வாழ்ந்து வந்த நிலையில் மலைக் கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு மலையில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் நடந்தேசென்று, கிரிசமுத்திரம் மற்றும் வாணியம்பாடி போன்ற பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் கர்ப்பிணிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதாக இருந்தாலும், அவர்களை டோலி கட்டி எடுத்துச்செல்லும் அவல நிலையில் தான் உள்ளது, இந்தக் கிராமம். இந்த மலைக் கிராமத்தில் சுமார் 531 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 160 அட்டைதாரர்களுக்கு கிரிசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு உட்பட்டு செயல்படும் நியாயவிலைக் கடையானது மாதம் ஒருமுறை மாதத்தின் இரண்டாவது வார செவ்வாய்க்கிழமைகளில் நெக்னா மலைக் கிராமத்தின் அடிவாரத்திற்கு நகரும் நியாய விலை வண்டியில் ரேஷன் பொருள்களை வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த கிரிசமுத்திர நியாய விலைக் கடையில் விற்பனையாளராக பணியாற்றும் பார்த்திபன் என்பவர், கடந்த 11ஆம் தேதியன்று கிரிசமுத்திர தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் அதிகாரிகளுக்கு எவ்வித முன் அனுமதியும் வாங்காமல், நெக்னா மலைக்கிராமத்திற்கு பாஜகவின் விளம்பர பதாகைகளுடன் லாரிகள் மூலம் ரேஷன் பொருள்களை கொண்டு சென்று மலைவாழ் மக்களுக்கு விநியோகம் செய்திருக்கிறார். இதனால், அங்கு மலைக்கிராமத்தில் இருந்த கிராம மக்கள் மற்றும் திமுகவினர் ஒன்றிணைந்து பாஜகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், ரேஷன் பொருள்களை வழங்காமலேயே பாஜகவினர் திரும்பினர். இதனைத் தொடர்ந்து மலைக் கிராமத்தில் ரேஷன் பொருள்களை விநியோகம் செய்ய கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்க அதிகாரிகளிடம் எவ்வித முன் அனுமதியும் வாங்காததாலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கிரிசமுத்திரம் நியாய விலைக்கடை விற்பனையாளர் பார்த்திபன் மற்றும் அவரை கண்காணிக்கத் தவறிய கிரிசமுத்திரம் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மகேஸ்வரி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய திருப்பத்தூர் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: Sathyadev Law Academy - சட்டம் பயிலும் மாணவர்களுக்காக புதிய பயிலகம் - தொடங்கிவைத்த முதலமைச்சர்