திருப்பத்தூர்: கரோனா நிவாரணப் பொருட்களை அமைச்சர் கே.சி. வீரமணி மலை கிராம மக்களுக்கு கால்நடையாக சென்று வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ளது நெக்னாமலை கிராமம். அந்த மலை கிராமம் 2500 அடி உயரமுள்ள மலை அடிவாரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. அங்கு 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இச்சூழலில் சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாமல், இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத கரடுமுரடான பாதையில் அந்த கிராம மக்கள் சென்று வரும் நிலையில் உள்ளனர். மலை கிராம மக்களின் அனைத்து அத்தியாவசியத் தேவைகளுக்கும் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான ஒத்தையடி பாதையில் நடந்தே சென்று தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும்.
தற்போது கோவிட்-19 தொற்று நோய் பரவாமல் தடுக்க தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலிலுள்ள நிலையில், வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் அந்த கிராம மக்களுக்கு அதிமுக மாவட்ட நிர்வாகம் சார்பிலும், தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து 150 குடும்பங்களுக்கு 3 மாதத்துக்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களும், காய்கறி அடங்கிய தொகுப்பை கொடுக்க திட்டமிட்டது.
இதற்காக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் 7 கிலோமீட்டர் தூரம் கரடு முரடான மலைப்பாதையில் நடந்தே சென்று மலை கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி, அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக ஆறுதல் கூறி விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதியளித்தனர்.
பின்னர் அமைச்சர் கே.சி. வீரமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;
சுதந்திரம் அடைந்து சாலை வசதி இன்றி தவிக்கும் மலை கிராம மக்களுக்கு சாலை வசதி அமைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இன்று அந்த மலை கிராமத்திற்கு நேரில் சென்று அவர்களை சந்தித்து சாலை வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க ஆய்வு மேற்கொண்டோம்.
மலை கிராம மக்கள் சாலை வசதி இன்றி தவிக்கும் நிலையை நாங்கள் 7 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று வந்ததில் உணர்கிறோம். இங்கு மத்திய அரசுக்குச் சொந்தமான வனத்துறை இடமுள்ளதால், இந்த மலை கிராம மக்களுக்கு சாலை வசதி அமைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் வனத்துறையின் நிபந்தனைகள் அதிகமாக உள்ளதால் வனத்துறையிடம் உத்தரவு பெறுவதில் தொடர்ந்து சிக்கல் வருகிறது.
மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக உள்ளதால் மத்திய அரசிடம் பேசி விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வோம் என்று மலை கிராம மக்களுக்கு உறுதி அளித்துள்ளதாக கூறினார்.