மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கிலிருந்து, ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் பகுதிக்கு லாரி மூலம் வந்த நபர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் அவர் பயணம் செய்த லாரி, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, கச்சேரி சாலை மற்றும் உதயேந்திரம் பகுதியில் இயங்கி வந்த கிளாசிக், விஎம்ஆர் உள்ளிட்ட இரண்டு தோல் தொழிற்சாலைகளுக்கு தோல் இறக்குமதி செய்துவிட்டு சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, பாதிப்பிற்குள்ளாகிய நபருடன் தொடர்பில் இருந்த லாரி ஓட்டுனர், தொழிற்சாலை உரிமையாளர், தோல் இறக்கியவர்கள், உரிமையாளர் வீட்டுக்கு வந்து சென்றவர்கள், தொழிற்சாலை பாதுகாவலர்கள் உள்ளிட்ட 42 பேரைத் தனிமைப்படுத்த, கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி உள்ளிட்ட வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி, வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள கிளாசிக் தோல் தொழிற்சாலையானது, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலிருந்து எடுத்து வரப்பட்ட தோல்களை இறக்குமதி செய்து ஊழியர்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையிலான வருவாய்த துறையினர் குழு, தொழிற்சாலைக்கு சீல் வைத்ததுடன் ஊரடங்கு உத்தரவை மீறி மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தோல் ஏற்றுமதி செய்து வந்த எம்.ஏ.ஆர் லாரி நிறுவனத்தின் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: 'ஸ்விகி மூலமாகவும் ஆவின் பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம்'- ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!