திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம், வெள்ளாள தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியர் செந்தில்குமார். இவருடைய மகன் பரமேஸ்வரன் (வயது17) பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி 392 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவனுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனால் பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த மே 7-ஆம் தேதி மாணவன் நீட் தேர்வு எழுதி உள்ளார்.
நீட் தேர்வு எழுதியதில் இருந்தே குறைவான மதிப்பு எண் கிடைத்து விடுமோ? என அச்சப்பட்ட மாணவன் மன அழுத்தத்திலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவன் பரமேஸ்வரன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாடியில் இருந்த அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதன் பின்னர் வீட்டிற்கு வந்த அவருடைய பெற்றோர்கள் நீண்ட நேரமாக மகனை காணவில்லை என தேடி உள்ளனர். பின்னர் மாடியில் உள்ள அறை உள் பக்கமாக பூட்டி இருப்பதை பார்த்து நீண்ட நேரமாக தட்டி உள்ளனர். அப்பொழுது மாணவர் கதவைத் திறக்காத நிலையில், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது பரமேஸ்வரன் அந்த அறையில் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
பின்னர் பரமேஸ்வரனை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் மாணவனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவன் பரமேஸ்வரன் தற்கொலைக்கு நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்து விடுமோ என்கிற பயம் தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் தற்கொலைக்கு நீட் தேர்வு பயம் தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு கோரிவரும் நிலையில், ஒவ்வொரு முறையும் நீட் தேர்வு சமயத்திலும், தேர்வு முடிவு வெளியாகும் சமயங்களிலும் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கு தேர்வு மீதான அச்சத்தையும், தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளும் மன தைரியத்தை அதிகரிக்கவும், தேர்வுகளை வெறும் தேர்வாக பார்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை மூலம் விழிப்புணர்வு வழக்கப்படுகிறது.
மேலும் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விபரங்களை தேசிய தேர்வு முகமையில் பெற்று, தொலைபேசி மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். மேலும் சில தினங்களுக்கு முன்னர் புதுச்சேரியிலும் நீட் தேர்வினால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது திருப்பத்தூரிலும் மாணவர் தற்கொலை செய்திருக்கிறார். மாணவர்கள் தற்கொலை செய்யும் மனப்பான்மையைக் கலைவதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: 'திராவிட மாடல் எனக் கூறிக்கொள்ளும் அரசு சுகாதார உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்'