திருப்பத்தூர்: தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியில் யானை ஒன்று சில நாட்களுக்கு முன்பு இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை அப்பகுதிக்கு ஆடு மேய்க்க சென்ற நபர்கள் பார்த்த பிறகு உடனடியாக ஆந்திர வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, யானை இறந்து கிடக்கும் இடம் தமிழ்நாடு வனத்துறைக்குச் சொந்தமான இடம் என்பதால், தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து உள்ளனர். ஆனால், சரியான இடம் எதுவென்ற தகவல் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை (பொறுப்பு) மாவட்ட உதவி வன அதிகாரி வினோத் குமார் தலைமையில், கரும்பூர் கால்நடை மருத்துவர்கள் இளவரசன், ராஜ்குமார் மற்றும் 20 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் கடந்த 2 நாட்களாக யானை இறந்து கிடக்கும் இடத்தை தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் தேடி வந்தனர்.
2 நாட்கள் தேடலுக்குப் பிறகு நேற்று தமிழ்நாடு ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள அரங்கல்துருகம் காப்புகாட்டில் யானை அழுகிய நிலையில் இறந்துள்ள இடத்தை கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து, இறந்த யானைக்கு கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னர், வனப்பகுதியிலேயே புதைத்தனர்.
தற்போது இறந்த யானையின் ரத்த மாதிரிகளை சேகரித்து டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. யானை இறந்து பல நாட்கள் ஆகியுள்ளதால், நோய் தாக்கத்தினால் கூட உயிரிழந்திருக்கலாம் எனவும், இறந்த யானை பெண் யானையாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவ குழுவினரின் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, யானை உயிரிழப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.