திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஒன்றியத்தை மூன்றாகப் பிரித்து கிழக்கு, மேற்கு, மத்திய பொறுப்பாளர்களை நியமித்து திமுக தலைமை அறிவித்தது.
மத்திய ஒன்றியப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள உமா, மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாதவர் என்பதாலும், அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் இல்லை என்பதாலும் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குள்பட்ட 12 ஊராட்சி கிளைக்கழகப் பொறுப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து வாணியம்பாடி அடுத்த புத்துகோவில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
அதில், உமா என்பவருக்குப் பதிலாக, மக்கள் மத்தியில் அறிமுகமான நான்கு முறை ஊராட்சி மன்றத் தலைவராகப் பணியாற்றிய மோகன் ராஜ் என்பவரை மத்திய ஒன்றியப் பொறுப்பாளராக நியமனம்செய்ய வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
பின்னர் திமுக பிரமுகர் ஆஞ்சி கூறுகையில், திமுக மத்திய ஒன்றியச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உமா என்பவர் சென்னையில் வசித்துவருகிறார். அவருக்கு ஒன்றியத்தில் மக்கள் செல்வாக்கு இல்லை, மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாதவரை மாவட்ட நிர்வாகம் நியமித்துள்ளது.
அவரை மாற்றி அதற்குப் பதிலாக கட்சியில் மக்களிடம் அறிமுகம் உள்ள நான்கு முறை உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற மோகன்ராஜ் என்பவரை நியமிக்க வலியுறுத்தி வாணியம்பாடி அடுத்த புத்துகோவில் தனியார் மண்டபத்தில் கூட்டம் நடத்தி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதனை மாவட்ட நிர்வாகம், தலைமைக் கழகத்திற்குத் தெரிவிக்கவுள்ளோம். ஒருவேளை ஒன்றியப் பொறுப்பாளரை மாற்றாவிட்டால் தொடர்ந்து தலைமைக்கழகம் வரை சென்று போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.
இப்போராட்டத்தில் 12 ஊராட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் ஈடுபட்டனர். மேலும் ஏற்கனவே ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியச் செயலாளராக இருந்த காசி என்பவரின் பதவியைப் பறித்து அறிமுகமில்லாத சதீஷ் என்பவருக்கு கொடுத்ததாக திமுகவினர் ஆதங்கப்படுகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட திமுகவில் தொடரும் பிரச்சினைகளால் அக்கட்சியினர், பொதுமக்கள் மத்தியில் திமுகவின் தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டடம் அடிக்கல் நாட்டும் விழா: பிரதமரை வாழ்த்திய முதலமைச்சர்!