திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் விழா நடைபெற்றது. இப்போட்டியை ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.சி. வில்வநாதன் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.
இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் - ஆந்திர மாநிலம் சித்தூர், குப்பம் ஆகிய பகுதிகளிலிருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின.
முன்னதாக காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன்பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த காளையின் உரிமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் முதலிடம் பிடித்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த காளையின் உரிமையாளருக்கு 70 ஆயிரம் ரூபாயும், இரண்டாமிடம் பிடித்த வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த காளையின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசு பெற்ற திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த காளையின் உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் தலைமையில் வருவாய்த் துறையினர், 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதையும் படிங்க: அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி