திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பூங்குளம் அடுத்த பலப்பநத்தம் பகுதியில் உள்ளது, பொன்மலை முருகன் கோயில். இந்தக் கோயிலை ஒட்டி நிலம் வைத்துள்ள ஒரு குடும்பத்தினர், பல ஆண்டுகளாக கோயிலில் பூஜை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த குடும்பத்தினர் பொன்மலை முருகன் கோயில் தங்களுக்கு சொந்தமானது என்று கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள், குறிப்பிட்ட அந்த குடும்பத்தினர் இனி பொன்மலை முருகன் கோயிலில் பூஜை செய்யக்கூடாது என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும், இது தொடர்பாக அந்த குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆடி மாத பிறப்பையொட்டி, பொன்மலை முருகன் கோயிலுக்கு அந்த குடும்பத்தினர் பூஜை செய்ய வந்துள்ளனர். அப்போது, “கோயில் சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளதால் பூஜை செய்யக்கூடாது. அப்படி பூஜை செய்ய வேண்டுமானால், ஊர் மக்கள் மற்றும் அந்த குடும்பத்தினர் என இரு தரப்பினரும் சேர்ந்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்த ஊர் மக்கள் பூஜையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் வருவாய் துறையினர் மற்றும் ஆலங்காயம் காவல் ஆய்வாளர் பழனி தலைமையிலான காவல்துறையினர், இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
இவ்வாறு நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது, “இந்த குடும்பத்தினர் கடந்த ஆண்டும் இதே போல் வழக்கு நிலுவையில் இருப்பதையும் மீறி, பூஜை செய்து வீண் பிரச்னையில் ஈடுபட்டனர். இந்த ஆண்டும் விதிகளை மீறி பூஜை செய்து பிரச்னையை ஏற்படுத்துகின்றனர்” என்று ஊர் மக்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து அடுத்தடுத்து எழுந்த வாதங்களால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதனைத்தொடர்ந்து துணை தாசில்தார் கௌரிசங்கர், ஆண்டியப்பனூர் வருவாய் ஆய்வாளர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் சரண்யா உள்ளிட்டோர் அடங்கிய வருவாய் துறையினர் கோயிலுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், இது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே தாசில்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ராஜராஜ சோழன் கட்டிய சிவன் கோயில் மாயம்; பொன்மாணிக்கவேல் புகார்