திருப்பத்தூர் தனியார் உணவக விடுதியில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
இதில், முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, செங்கோட்டையன், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
திமுக அப்ப ஒரு பேச்சு; இப்ப ஒரு பேச்சு!
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "திராவிட முன்னேற்றக் கழகம் தில்லுமுல்லு செய்தே ஆட்சியைப் பிடித்தது. அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற திமுக தில்லுமுல்லு செய்யும். அதனை அதிமுகவினர் முறியடித்து வெற்றிபெற வேண்டும்.
ஜெயலலிதா ஆட்சியில் சொன்ன வாக்குறுதியையும் செய்தோம். சொல்லாததையும் செய்தோம். அதனை மக்களுக்கு எடுத்துக்கூறி வாக்குச் சேகரிக்க வேண்டும். மிகப்பெரிய மாவட்டமான வேலூரை நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் என ஜெயலலிதாவின் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
அதற்கு முழுக் காரணம் அமைச்சர் கே.சி. வீரமணி ஆவார். திமுக தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஒரு பேச்சு பேசி பொதுமக்களை ஏமாற்றிவருகின்றது. நாடாளுமன்றத் தேர்தலின்போது கல்விக்கடன், வேளாண் பயிர்க் கடன் ரத்து செய்யப்படும் என திமுகவினர் பொய் வாக்குறுதி அளித்தனர்.
அவதூறு பரப்பும் திமுக
வாக்குகள் பெறுவதற்காகவே பச்சைப் பொய் சொல்லி ஸ்டாலின் ஆட்சியைப் பிடித்தார். கடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க சுமார் 525 தேர்தல் வாக்குறுதிகளைக் கூறினார். அதேபோல் முதலமைச்சரானால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து எனக் கூறினார்.
கல்விக்கடன், வேளாண் பயிர்க்கடன் நகைக்கடன் தள்ளுபடி என பல வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. ஆனால் தற்போது கூட்டுறவு வங்கியில் மட்டும் வேளாண் பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடி என திமுக அரசு அறிவித்து அதிலும் பல்வேறு நிபந்தனைகளால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டுவருகின்றனர்.
ஜெயலலிதா கொண்டுவந்த சிறப்பான திட்டத்திற்கு மட்டும்தான் திமுக அரசு அடிக்கல் நாட்டிவருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற நான்கு மாத காலத்திலிருந்து தற்போதுவரை அதிமுகவினர், அமைச்சர்கள் மீது பொய் வழக்குப்பதிந்து, அவதூறு பரப்பும் வேலையை மட்டும் செய்துவருகிறது.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக
மக்கள் நலனை யோசிக்கவில்லை, நான் சுமார் நான்கு ஆண்டு இரண்டு மாதங்களாக முதலமைச்சராக இருந்தேன். நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல வழக்குகள் போட்டிருப்பேன். நாங்கள் அப்படி செய்யவில்லை, மக்கள் நலனை மட்டும் கருத்தில்கொண்டு பணியாற்றிவந்தோம்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் வெற்றிபெற்று பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் திமுகவினர் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவார்கள். ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள். அதனைக் கருத்தில்கொண்டு மக்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'ஏ.கே. ராஜன் குழுவுக்கு நீட் குறித்த எந்தப் புரிதலும் இல்லை'