கோவில்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை! - கோவில்பட்டி கொலை
Kovilpatti youth murder: கோவில்பட்டி அருகே ஆலம்பட்டியில் முன் விரோதம் காரணமாக இளைஞரை வெட்டிப் படுகொலை செய்து விட்டு, தப்பிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


Published : Nov 24, 2023, 8:25 AM IST
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், காளிமுத்து மகன் அருண் பாரதி(20) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்தவர் அனீஸ் (19). இருவரும் நெருங்கிய நண்பர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (நவ.23) இருவரும் கோவில்பட்டி பைபாஸ் சாலை, ஆலம்பட்டி அய்யனார் கோயில் பின்புறம் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அங்கு எதிர்பாராத விதமாக ஒரு பைக்கில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அருண் பாரதியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில், தலை துண்டாகி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அருண் பாரதி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், உயிரிழந்த அருண் பாரதியின் உடலைக் கைப்பற்றி, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் கிடைக்கப் பெற்ற தடயங்களைக் கைப்பற்றி, சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்து, வெட்டிச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கோவில்பட்டி இனாம் மணியாச்சியைச் சேர்ந்த முத்துராமன் மற்றும் ராஜபாண்டி ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது முத்துராமன் தரப்பினரைச் சேர்ந்த சிலரை, ராஜபாண்டி தரப்பினர் அரிவாளல் வெட்டியுள்ளனர்.
அந்த சம்பவத்தில் ராஜபாண்டி தரப்பில் அருண் பாரதி இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், போலீசாரால் அருண் பாரதி கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்து, கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் அவர் வெளி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், முன் விரோதம் காரணமாகதான் மர்ம நபர்களால் அருண் பாரதி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என மேற்கு காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 55 முறை கத்தி குத்து, சிசிடிவி கேமரா முன் நடனம் - டெல்லியில் கொடூர கொலை