தூத்துக்குடி: 300 ஏழைப் பெண்களுக்கு ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருமணத்துக்கான தங்க நாணயம் மற்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான திருமண நிதி உதவியை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், “பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமுதாயத்தில் பெண்கள் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஈவேரா மணியம்மை நினைவு திருமண நிதி உதவித் திட்டம், விதவை மகள் திருமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரை நிதி உதவியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக 300 ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தங்கம் வழங்கப்படுகிறது. அடுத்த கட்டமாக தொடர்ந்து வழங்கப்படும். தமிழக அரசு பெண்களின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி பயில, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவிகள் உயர்கல்வி பயின்றால் அறிவாற்றல் மிக்க சமுதாய உருவாகும். வருங்காலத்தில் தங்களது குழந்தைகளுக்கும் கல்வியை கற்றுக் கொடுப்பார்கள் என்ற நோக்கத்தில்தான் தமிழக அரசு புதுமைப் பெண் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதி உள்ள பெண்கள் மேல்முறையீடு செய்தால், அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்” என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.லட்சுமிபதி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையின் காரணமாக தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீதா ஜீவன், மழை நீர் வெளியேற்றும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வேன்.. முற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் - அண்ணாமலை மோதல்!