தமிழ்நாட்டின் பிரதான துறைமுகங்களில் ஒன்றான வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில், ஒரேநாளில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 395 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
இதற்கு முன்பு 2019 ஜூலை 26ஆம் தேதி ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 597 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டதே சாதனையாக இருந்தது.
இதைப்போல் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் கப்பல் சரக்குத் தளம் ஒன்பதில் கடந்த 12ஆம் தேதி 'எம்.வி. கீரின் கே மாக்ஸ் எஸ்' என்ற கப்பலிலிருந்து 55 ஆயிரத்து 363 டன் நிலக்கரியை 24 மணி நேரத்தில் கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டது.
இந்தச் சாதனையானது, இதற்கு முந்தைய சாதனையான கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி 'எம்.வி. தியோடர் ஓல்டன்டார்ப்' என்ற கப்பலிலிருந்து 24 மணி நேரத்தில் கையாளப்பட்ட அளவான 55 ஆயிரத்து 105 மெட்ரிக் டன் நிலக்கரியை விட அதிகமாகும்.
லைபீரிய நாட்டுக் கொடியுடன் வந்த எம்.வி. கீரின் கே மாக்ஸ் எஸ் என்ற கப்பல் 229 மீட்டர் நீளம், 32.26 மீட்டர் அகலம், 14.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்டது.
இக்கப்பல் இந்தோனேஷியா நாட்டிலுள்ள அடாங்க் துறைமுகத்திலிருந்து 76 ஆயிரத்து 285 டன் நிலக்கரியை வ.உ. சிதம்பரனார் துறைமுகத்துக்கு எடுத்துவந்துள்ளது. இந்த நிலக்கரியானது சென்னையிலுள்ள இந்தியா கோக் மற்றும் பவர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து துறைமுகத் தலைவர் டி.கே. ராமசந்திரன் கூறுகையில், "இந்த ஒருங்கிணைந்த சாதனையைப் படைக்க காரணமாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள், அயராது உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: மீண்டும் வங்கதேசத்துடன் தொடங்கிய வர்த்தகம்