தூத்துக்குடி: வைகாசி விசாகத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் இன்று (ஜூன் 2) சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. காலை முதலே பக்தர்கள் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். வைகாசி விசாகம் தினத்தன்று அகத்தியர் தனது கமண்டல நீரில் இருந்து, பொதிகை மலையில் விட்டு தாமிரபரணி நதியை ஓடச் செய்தார் என்று 'தாமிரபரணி மகாத்மியம்' கூறுகிறது.
தாமிரபரணி நதி பரணி என போற்றப்பட்டாலும் வைகாசி விசாக நட்சத்திரத்தில் தோன்றியவள் என்ற கூற்றும் தாமிரபரணி மகாத்மியத்தில் இடம்பெற்றுள்ளது. எனவே தான் வைகாசி விசாகம் தாமிரபரணி நதியில் பெருமையாகப் போற்றப்படுகிறது. இந்த நாளில் தான் குபேரன் தாமிரபரணி நதியில் மூழ்கி, தனது இழந்த பொருளை மீட்டதாக கூறப்படுகிறது. நம்மாழ்வார் பிறந்தது இந்த தினத்தில் தான். முருகப்பெருமான் அவதாரமும் வைகாசி விசாகத்தில் தான் நடைபெறுகிறது.
இந்த நாளில் தாமிரபணியில் எங்கு குளித்தாலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணம் மகாமகத்தில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த பெருமை கொண்ட தாமிரபரணிக்கு அதன் பிறந்த நாளையொட்டி, நதிக்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு மழை வேண்டி தாமிரபரணி கரையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியில் தாமிரபரணி பிறந்த நாளை முன்னிட்டு, நதிக்கு அபிஷேகம் செய்து பூஜை நடந்தது. முத்தாலங்குறிச்சி வீரபாண்டிஸ்வரர் என்ற முகில் வண்ணநாதர், முக்குறுணி அரிசி பிள்ளையார், லெட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து கோயில் வளாகத்தில் மேல ஆழ்வார் தோப்பு உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்று நடப்பட்டது. பின்னர் முத்தாலங்குறிச்சி நல்லபிள்ளைபெற்ற குணவதியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. இதைத் தொடர்ந்து, கோயிலில் இருந்து கும்பம் எடுத்து ஊர்வலமாக வந்து தாமிரபரணி நதிக்கு 21 வகையான அபிஷேகங்கள் செய்து கும்ப நீர் ஊற்றப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட, மழை வேண்டி சிறப்பு ஆராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி தலைமை வகித்து பூஜைகளை நடத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி நதிக்கரைகளில், பல்வேறு கோயில் நிர்வாகங்கள் சார்பில் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.