தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்கு உட்பட்ட கருங்குளத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. கடந்த வருடம் வரை மிகவும் சிறப்பான முறையில் மருத்துவர்கள், பணியாளர்கள் சிகிச்சைப் பார்த்து வந்தனர். குறிப்பாக இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்த்தால் சுகப்பிரசவம் தான் என்றும் கூறி வந்தனர். இதற்காக கடந்த காலம் வரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் விருதுகள் பல வாங்கியுள்ளது. ஆனால் தற்போது இந்த மருத்துவமனை பணியாளர்கள் பணிகளை ஈடுபாட்டுடன் பார்ப்பது கிடையாது என்ற குற்றச்சாட்டு வெகுவாக எழுந்துள்ளது.
குறிப்பாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. கடந்த வாரம் டெல்லியில் இருந்து ஒரு குழுவினர் வருவதாக கூறியதால் தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வெளியே மட்டும் மினுங்குகிறது. ஆனால் உள்ளே எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக மருத்துவமனையில் பேட்டரி, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் மருத்துவமனை முழுவதும் இருளில் மூழ்குகிறது.
கடந்த வாரம் கூட ஒரு பிரசவம் இருட்டில் பார்த்துள்ளனர். இது தவிர மிகவும் வருந்ததக்க விஷயம் என்னவென்றால், வாரத்திற்கு ஐந்து முறை கர்ப்பிணி பெண்களை அழைக்கழிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் வெகுவாக எழுந்துள்ளது. மருத்துவமனைக்கு முதல்நாள் சென்றால் ஒரு டெஸ்ட் மட்டும் எடுத்து விட்டு அடுத்த டெஸ்ட் எடுக்க ஆள் இல்லை எனவும், மறுநாள் சென்றால், இந்த ஸ்கேன், எக்கோ எடுத்து வந்தால் தான் இங்கு பார்க்க முடியும் என்று வெளியே உள்ள ஸ்கேன் செண்டர், தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக தெரிகிறது.
இதைவிட கொடுமை என்னவென்றால் மருத்துவரே இனி அடுத்த மாதத்தில் இருந்து நீங்கள் எங்கள் மருத்துவமனைக்கு வராதீர்கள். உங்களுக்கு எங்களால் மருத்துவம் பார்க்க முடியாது. ஸ்ரீவைகுண்டம் அல்லது திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், மருத்துவமனையில் பணியில் இருக்கும் செவிலியர், ‘நீங்கள் பிரசவத்திற்கு இங்கு வாருங்கள். நாங்கள் நன்றாக பார்க்கிறோம்’ என்று கூறுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பேசுவதால் கர்ப்பிணிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும், இந்த பகுதியை பொறுத்தவரை 50க்கும் மேற்பட்ட குக்கிராமத்தைச் சேர்ந்த அன்றாடம் வேலை பார்த்து உழைத்து சாப்பிடுபவர்கள் தான் உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மருத்துவம் படித்தவர் என்பதால் கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு முறையான சிகிச்சைப் பார்த்து சுகப்பிரசவம் செய்து கொடுக்க மருத்துவர்களுக்கு ஆவணம் செய்யும்படி தாய்மார்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சிகிச்சை தாமதத்தால் இளைஞர் மரணம் - தனியார் மருத்துவமனை செல்ல வற்புறுத்திய மருத்துவர்கள்?