தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், இதற்கு முன்னர் உங்களிடம் நான் வாக்குக் கேட்டு வந்தபொழுது ஒரு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டிருந்தேன். அதன்படி ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் அனைவரும் உதயசூரியனுக்கு வாக்களித்திருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.
அதன் மூலமாக மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மட்டுமல்ல. இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியும் விரைவில் மாறப்போகிறது.
தற்போது இங்கு டெட்பாடியின் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த டெட்பாடியின் ஆட்சியை சவப்பெட்டிக்குள் வைத்து நாலு புறமும் ஆணி அடிப்பதற்குதான் இந்த 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடக்கிறது. மக்களாகிய நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களித்து திமுகவை வெற்றிப் பெற செய்ய வேண்டும்.
தனது ஆட்சிக்காலத்தில் 36 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றதாக எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கிறார். இப்படிப்பட்ட முதல்வர் நமக்கு தேவைதானா?.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது எனக்கூறி விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என கூறியவர் ஓ பன்னீர்செல்வம். ஆனால் தற்போது விசாரணை கமிஷனின் விசாரணைக்கு கூட அவர் ஆஜராகாமல் இருந்துவருகிறார்.
அதிமுகவினரின் ஆட்சியில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கே அவர்களால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. இதில் அவர்கள், மக்களை எப்படி பாதுகாப்பார்கள் என்று அப்போது கேள்வி எழுப்பினர்.