தூத்துக்குடி: முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப்(VAO) பணிபுரிந்து வந்தவர் லூர்து பிரான்சிஸ். இவரை கடந்த ஏப்.25ம் தேதி மர்ம நபர்கள் அலுவலகத்தில் புகுந்து அரிவாளால் ஓட ஓட சரமாரியாக வெட்டினர். இதில் காயமடைந்த லூர்து பிரான்சிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் அதிக அளவில் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினரிடம் வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் புகார் அளித்துள்ளார். அந்த மணல் கடத்தலில் சம்பந்தப்பட்ட கலியாவூர் வேதகோயில் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் ராம சுப்பிரமணியன் (41) மற்றும் முருகன் மகன் மாரிமுத்து (31) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த இருவரும் அவரை பழிவாங்கும் நோக்கில் வெட்டிக் கொலை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை மற்றும் ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி துணைக்காவல் கண்காணிப்பாளர் ரூரல் சுரேஷ் நியமனம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 52 சாட்சிகள் இந்த கொலை வழக்கு தொடர்பாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட அரிவாள், இரும்பு ராடு உள்ளிட்ட 13 பொருட்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது குற்றவாளியான மாரிமுத்து தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும், தனக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை எனக் கூறி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன்தாஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம் குற்றவாளி மாரிமுத்துவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் வெட்டி படுகொலை செய்து தொடர்பான வழக்கு விசாரணை வரும் 21ம் தேதி முதல் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் என மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடி சிறுமிக்கு புது வீடு - அடிக்கல் நாட்டிய அமைச்சர் காந்தி!