தூத்துக்குடி: ஜெயராஜ் ரோடு காய்கனி மார்க்கெட் பகுதியில், செல்லப்பாண்டியன் என்பவர் பாண்டியன் பலசரக்கு மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் என்ற பெயரில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை அவரது கடை அருகே வாகனத்தை நிறுத்தி சரக்குகள் இறக்கி கொண்டிருந்தபோது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் திடீரென வந்து கடைக்கு சீல் வைத்ததாகத் தெரிகிறது. அப்போது வியாபாரிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் வியாபாரிகள் பேசுகையில், “மார்க்கெட் அருகே ரோட்டை இரண்டாகப் பிரித்து இருக்கிறீர்கள்.
ஏன் பெரிய சூப்பர் மார்க்கெட் அருகே ரோட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டியது தானே. வண்டி நின்றதுக்கு கடையை சீல் வைத்தால் எப்படி?” என வியாபாரிகள் கேட்கின்றனர். அதற்கு மாநகராட்சி அலுவலர் கூறுகையில், நாங்கள் சொன்னதை கேட்கிறோம். நாங்கள் வெறும் அம்புதான். ஏவியவர்களை கேட்டுக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது. மேலும், இது குறித்து அப்பகுதி வியபாரிகள் கூறுகையில், “போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதற்காக கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில், மாநகராட்சி அதிகாரிகள் இவ்வாறு செயல்படுகின்றனர்” என்றனர்.
மேலும், சீல் வைக்கப்பட்ட கடையின் வியாபாரி செல்லப்பாண்டியன், தனது மனைவிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட அவரது மனைவி சசிகலா (40), அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வால்பாறை அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி!