தூத்துக்குடி: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட 3,359 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இதனையடுத்து, இந்த தேர்வை எழுதுவதற்காக 2 லட்சத்து 84 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட மையங்களில் அமைக்கப்பட்டு இன்று (டிச.10) தேர்வு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் 7,077 ஆண்களும், 1,991 பெண்களும் என மொத்தம் 9,068 பேர் இந்த தேர்வை எழுதினர். முன்னதாக அதிகாலை முதலே தேர்வு மையங்களில் குவிந்த தேர்வாளர்களை, கடும் சோதனைக்குப் பின்பு தேர்வு எழுதுபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
காலை 10 மணிக்குத் தொடங்கிய தேர்வு மதியம் 12.45 முடிவுற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் கூடுதல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் ஏழு காவல் துணை கண்காணிப்பாளர்கள், 33 ஆய்வாளர்கள் என சுமார் 850 காவல்துறையினர் இந்த தேர்வுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இன்று (டிச.10) நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.4,000 கோடிக்கான வெள்ளை அறிக்கை வேண்டும்.. அரசியல் கட்சிகள் முதல் பொதுமக்களின் அதிருப்தியான கேள்வி!