உலகளவில் பரவி வரும் "கோவிட் -19" என்றழைக்கப்படும் கொரோனா வைரஸுக்கு, இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நோய் தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு நோய் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதேபோன்று, வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊர் திரும்பும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பது குறித்தும், விமான நிலையத்திலேயே மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில், தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளுக்கு இன்று மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. முகாமில் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த 50 பயணிகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து அவர்களுக்கு, கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், முகக்கவசம் ஆகியவை விநியோகிக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் திருவாசகமணி செய்தியாளர்களிடம் கூறுகையில்," வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு, சுகாதாரமாக இருப்பது போன்றவை குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.
அதேபோன்று வெளிநாட்டில் இருந்து தூத்துக்குடி திரும்பிய நபர்களும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இது தவிர, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
அபுதாபியிலிருந்து, தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் திரும்பிய விமானப் பயணி சேது கூறுகையில்,"பயணிகளுக்கு விமான நிலையத்தில் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனை முகாம் வரவேற்புக்குரியது. உலகம் முழுவதும் வைரஸ் தொற்று பாதிப்பைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசும், மத்திய அரசும் இந்த விஷயத்தில் தகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
இதில் பயணிகளுக்கு சிறிது சிரமம் ஏற்பட்டாலும், அதை முழுமனதோடு ஏற்றுக் கொள்ளவேண்டும். சென்னை வழியாக வரும்போது மருத்துவர் பரிசோதனைக்கு பிறகே பயணிகள் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதுபோல தற்போது தூத்துக்குடி வந்து இறங்கியதும் பயணிகளுக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது. ஆகவே இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமானதுதான்" என்றார்.
இதையும் படிங்க:கொரோனா வைரஸ் - மாஸ்க் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி