அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா தூத்துக்குடியில் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிடுகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் விஜயசீலனை ஆதரித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. வாசன் சிதம்பரநகர், தமிழ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் வெற்றிபெற்றால், இந்த நகரின் மேன்மைக்காகப் பாடுபடுவார்.
மத்திய அரசு தூத்துக்குடிக்கு சீர்மிகு நகரம் திட்டத்தைக் கொடுத்திருக்கிறது. இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி 100 விழுக்காடு மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும். மகளிர் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் என்பதால் அதிமுக அரசு இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய், விலையில்லா சலவை இயந்திரம், விலையில்லா சூரிய அடுப்பு, தாலிக்குத் தங்கம் உள்ளிட்டவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
சாமானியர்களின் தேவைகளையும் எண்ணங்களையும் புரிந்துகொண்ட முதலமைச்சர் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மகளிர் படிப்படியாக முன்னேற வேண்டும் என்பதற்காக மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் ஒத்த கருத்துடைய அரசு அமைய தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
வளர்ச்சித் தொடர, வாழ்வு செழிக்க, புதிய திட்டங்கள் செயல்படுத்த, சரியான சலுகைகள் கிடைக்க, இருக்கும் நிலை உயர அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி கழிவுகளைச் சேகரிக்கும் தருவைகுளம் குப்பைக் கிடங்கைப் பசுமையாக மாற்றி அங்கே மாசு ஏற்படுவதை தடுக்கக்கூடிய திட்டங்கள் கொண்டுவரப்படும்" என்றார்.
இதையும் படிங்க: சர்ச்சைகளின் நாயகன் கமல்ஹாசன்?