தூத்துக்குடி: திருப்பூரை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 34), இவரது மனைவி செல்வி (வயது 28). இவர்கள் திருப்பூரில் கடை நடத்தி வருகிறார்கள். இந்த தம்பதிகளின் 7 வயது மகன் தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே தெற்கு கல்மேடு கிராமத்தில் உள்ள தனது தாத்தா முனியசாமி (வயது 53) வீட்டில் தங்கி, எட்டையாபுரம் அருகிலுள்ள கீழ நம்பியாபுரம் கிராமத்தில் உள்ள இந்து தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில் சரியாக படிக்காததால் ஆசிரியர், பாரத் (38) என்பவர் மாணவனை அடித்ததாகவும், இதில் அந்த மாணவனுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த தாத்தா முனியசாமி, மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவலிங்கம் அவரது மனைவி செல்வி மற்றும் முனியசாமி, அவரது மனைவி மாரி செல்வம் ஆகிய நால்வரும் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் பாரத்திடம் தகராறு செய்து அவரைத் தாக்கி உள்ளார்கள். அதுமட்டுமின்றி வகுப்பறையில் உள்ள பொருள்களையும் சேதப்படுத்தி உள்ளனர்.
சண்டையின் போது தடுக்க வந்த தலைமை ஆசிரியை குருவம்மாள் என்பவரையும் சிறுவனின் பெற்றோர் தாக்கியுள்ளனர். இதனால் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியை எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. எனவே இந்த நிகழ்வைக் குறித்து ஆசிரியர் பாரத் அருகிலுள்ள எட்டையபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி உள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த பொதுமக்கள் கொடூரத் தாக்குதல் நடத்திய அந்த கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவலிங்கம், செல்வி, முனியசாமி ஆகிய மூவரையும் கைது செய்து உள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியின் உள்ளே சென்று ஆசிரியரைத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய தம்பதி.. பகீர் வீடியோ..