தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் செல்லத்துரை. இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவு செய்து தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ மூலம் அவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சில கோரிக்கைகளை வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விவாதமானது.
செல்லத்துரை பதிவிட்ட அந்த வீடியோவில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வணக்கம். எனது பெயரை, எனது சொந்த மாவட்டமான திருநெல்வேலி மானூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இணைத்துள்ளனர். இதனை நீக்க மனு கொடுத்துள்ளேன். ஆனால் எனக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் காவல்துறையில் பணியாற்றும் என்னைப் போன்ற காவலர்களின் நலன்களைப் பேண சங்கம் அமைத்தால் தான் சரியாக இருக்கும்.
இதுபற்றி தாங்கள் ஆலோசித்து சங்கம் அமைக்க வேண்டும். குறிப்பாக பெண் காவலர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு சோதனைகளை அனுபவிக்கின்றனர். இதனால் சங்கம் அமைப்பது அவசியம். இல்லாவிட்டால் தற்கொலை செய்யும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பே இல்லை” என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, செல்லத்துரையை அழைத்து விசாரணை நடத்தியது. அப்போது அதிகாரிகளிடம் அவர் சரியான முறையில் பதிலளிக்காததாகக் கூறப்படுகிறது.
அதோடு செல்லத்துரை திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் பணியாற்றியபோது, போலீஸ் யூனிபார்ம் அணியாமலும், உயர் அதிகாரிகளுக்கு உரிய மரியாதை கொடுக்காமலும் இருந்ததாக, ஏற்கனவே அவர் மீது புகார் இருந்தது. அதோடு, செல்லத்துரை சார்பில் ஏற்கனவே விருப்ப ஓய்வு வேண்டும் என காவல் துறை உயர் அதிகாரிக்கு மனு வழங்கி இருந்தார்.
இந்த நிலையில், தற்போதைய வீடியோவை தொடர்ந்து செல்லத்துரைக்கு கட்டாய ஓய்வு வழங்கி தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன் ஆணை வெளியிட்டுள்ளார். அதில், அதிகாரிகளுக்கு உரிய மரியாதை வழங்காதது மற்றும் வலைதளங்களில் சர்ச்சை வீடியோ வெளியிட்டு உள்ளதாலும், விருப்ப ஓய்வு கேட்டதாலும் செல்லத்துரைக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நிலத் தகராறில் முன்விரோதம்! வீடு புகுந்து கணவன் - மனைவிக்கு அரிவாள் வெட்டு..! திருச்செந்தூர் அருகே பயங்கரம்..!