தூத்துக்குடி: தமிழ்நாட்டில் 1996-ல் இருந்து 2001-ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக்காலத்தில் அப்போது தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினராகவும், மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்தவர் என்.பெரியசாமி. இவர் தனது குடும்பத்தினர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகப் புகார் எழுந்தது.
புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த 2003-ம் ஆண்டு தூத்துக்குடி நீதிமன்றத்தில் என்.பெரியசாமி, அவரது மனைவி எபனேசர், அவர்களது மகளும் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜூவன், அவரது கணவர் ஜூவன் ஜேக்கப், பெரியசாமியின் மகன் ஜெகன் பெரியசாமி (தற்போதைய தூத்துக்குடி மாநகராட்சி மேயர்) மற்றொரு மகன் ராஜா உள்ளிட்ட 6-பேர் மீது வழக்கு தாக்கல் செய்தது.
இந்த வழக்கானது கடந்த 2014-ம் ஆண்டு முதல் 7-ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரணை செய்த மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று அமைச்சர் கீதா ஜீவன், அவரது கணவர் ஜீவன் ஜேக்கப், தாய் எபனேசர், தம்பி ஜெகன் பெரியசாமி (மேயர்), மற்றொரு தம்பி ராஜா, மற்றும் தந்தை என்.பெரியசாமி ஆறு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், “அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, தங்களது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் சொத்துக் குவிப்பு வழக்கினை தொடர்ந்தது. 21 ஆண்டுகளுக்குப் பின்பு இந்த தீர்ப்பில் நீதி கிடைத்துள்ளது. நியாயம் வென்றுள்ளது” என கூறினார்.
இதையும் படிங்க: டிடிஎப் வாசனை காண வந்த இளைஞர்கள் - 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸ்