தூத்துக்குடி: மழை வெள்ளத்தில் வாழ்வாதாரத்தை இழந்து அனாதை போல நிற்பதாக கண்ணீர் விடும் பொட்டல் கிராமவாசிகள், நிவாரண தொகை ஏதும் வேண்டாம், வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய நாட்களில் அதி கனமழை பெய்த நிலையில், பல கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக மாநகரின் காயல்பட்டினம், திருச்செந்தூர், பெருங்குளம், ஏரல் மற்றும் அதன் அருகே உள்ள உமரிக்காடு, சிறுத்தெண்டநல்லூர், சூலை வாய்க்கால், ஆத்தூர், பொட்டல் ஆகிய கிராமங்கள் மழை வெள்ளத்தால் முற்றிலும் நாசமாகியுள்ளன. குறிப்பாக ஏரல் அருகே உள்ள மணலூர், சொக்கபழக்கரை போன்ற கிராமங்கள் ஒரு தனித்தீவு போல் மாறி காட்சியளிக்கிறது.
இதனால் அந்த கிராம மக்களுக்கு வெளி உலகத்துடனான தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் வசித்து வந்த மக்கள், தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ள நிலையில், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் சோகத்தில் கண்ணீர் விட்டு வருகின்றனர்.
இதைவிட மோசமான நிலையில்தான் தற்போது தூத்துக்குடி மாவட்ட ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள பொட்டல் எனும் கிராமம் இருந்து வருகிறது. இந்த கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பழமையான கிராமம் என்பதால், பெரும்பாலும் மண் வீடுகளாக உள்ளது.
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாக கொண்டுள்ள இந்த கிராமத்தை, மழை வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த வாரம் பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள வாய்க்கால் நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இந்த வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால், வீட்டிற்குள் இருந்த புத்தகங்கள், உடமைகள், பாத்திரங்கள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
மேலும் அவை மண் வீடுகளாக இருந்ததால், வெள்ளத்தின் வேகம் அந்த கிராமத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட வீடுகளை முற்றிலும் இடித்து சேதமாக்கி, மக்கள் வாழ முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வீடுகளை இழந்துள்ள மக்கள், அருகில் உள்ள பள்ளி கட்டடத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதையும் படிங்க: விபரீதமாக மாறியதா வெள்ளநீர் கால்வாய்? - தத்தளித்த கிராமம்! சபாநாயகரின் விளக்கம்
கிராமத்தை வெள்ளம் பாதித்து 6 நாட்களாகியும், தற்போது வரை தங்களுக்கு உணவு, பிஸ்கட், தண்ணீர், ஆடைகள் போன்ற எந்த நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை என மக்கள் வேதனை கூறியுள்ளனர். மேலும், எந்த ஒரு அதிகாரிகளோ, அரசியல் கட்சியினர்களோ கூட வந்து தங்களை பார்க்கவில்லை எனவும், தங்களுக்கு உணவு போன்ற எந்த ஒரு அத்தியாவசிய உதவிகளைகூட செய்யவில்லை எனவும் கிராமவாசிகள் ஆத்திரமடைந்துள்ளனர்.
மேலும், வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், வாழ்வாதாரத்திற்கு அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பள்ளிக் குழந்தைகளின் புத்தகங்கள் அனைத்தும் வீதிகளில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.
வெள்ள நீரில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டதால், உணவுப் பொருட்கள் கூட இல்லாமல் தவித்து வரும் மக்கள், தங்களுக்கு உணவு ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அனைத்து வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கும் இந்த மக்கள், தங்களுக்கு நிவாரண உதவிகள் ஏதும் வேண்டாம் எனவும், வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மழையால் வீட்டை இழந்த பெண் ஒருவர் கூறுகையில், “மழை நீரால் வீட்டை இழந்து நிற்கிறோம். வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் நாசமாகின. உணவுக்கு கூட வழியின்றி நிற்கதியாய் நிற்கிறோம். கால்நடைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் சென்றுவிட்டது. தற்போது வரை அரசு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளே வந்து பார்க்கவில்லை” என வேதனையடைந்துள்ளார்.