தூத்துக்குடி: ராஜபாண்டி நகரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரின் 6 வயது மகள் மகாலட்சுமி கடந்த மாதம் 24ஆம் தேதி பிபி, பல்ஸ் குறைவு காரணமாக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிறுமி மகாலட்சுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சையளித்தும், கடந்த 12ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனை அலட்சிய போக்கின் காரணமாக உயிரிழந்ததாக அக்குடும்பத்தினர் மற்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில், இதற்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. இது குறித்து மருத்துவமனை டீன் சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தற்போது கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகின்றன. உடம்பு வலி, தொண்டை வலி, காய்ச்சல் போன்றவைகள் இதற்கு அறிகுறியாக இருக்கும்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த அளவிற்கு இது போன்ற அறிகுறிகள் இல்லை, அப்படி வரும் பட்சத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த மகாலக்ஷ்மி என்ற 6 வயது குழந்தை கடந்த மாதம் 24ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த குழந்தை சிகிச்சைப் பலனின்றி கடந்த 12ஆம் தேதி உயிரிழந்தது. மேலும், அக்குழந்தை உடம்பில் ரத்த அனு உற்பத்தி குறைவால் இறந்துள்ளது. அக்குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இல்லை. ஆனால் டெங்கு காய்ச்சல் என்று சிலர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறு.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பூஜ்யம் (டெத்) என்ற கொள்கையில் இருந்து வருகிறோம். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் நல்ல முறையில் வீடு திரும்ப வேண்டும் என்ற நிலையில் உள்ளோம். பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. காய்ச்சலுக்காக 20 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை, பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். சமுக இடைவெளியை பின்பற்ற வேண்டும்” என்று கேட்டு கொண்டார்.
இதையும் படிங்க: மீண்டும் வைரஸ் பரவல்.. புதுச்சேரியில் 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை..