ஊரடங்கு மீறல்: தூத்துக்குடியில் 86 லட்சம் அபராதம் வசூல்! - thoothukudi district news in tamil
ஊரடங்கை மீறியது தொடர்பாக தூத்துக்குடியில் 86 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர், தூத்துக்குடியில் நேற்று (மே.15) முதல் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. ஊரடங்கை மீறி வெளியே தேவையற்று சுற்றித்திரிந்தவர்கள் எச்சரிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்நிலையல், புதிய பேருந்து நிலையம் அருகே நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் இன்று (மே.16) நடைபெற்ற வாகனத் தணிக்கையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
மேலும், வாகனத்தில் தேவையில்லாமல் ஊர் சுற்றுவதைத் தடுப்பதற்காக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 65 இடங்களில் வாகனச் சோதனை நடைபெறுகிறது. மாவட்டத்தின் காவல் துணைச் சரகங்கள் ஒவ்வொன்றிலும் ஊரடங்கில் தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்ததாக 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எனவே, பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே இருக்க வேண்டும். அவசியமின்றி வெளியே வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசு வழிகாட்டுதலின்படி அபராதம் விதிக்கப்படும். இதுவரை ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் செயல்பட்டது தொடர்பாக 600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மே 10ஆம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக காவல் துறையின் சார்பில் 86 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.
இதையும் படிங்க: கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை - மூன்று பேர் கைது!