தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அமலாக்கத் துறையை சேர்ப்பது தொடர்பான மனு மீதான விசாரணையை, டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2001-2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.90 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக, 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2001 முதல் 2006 வரையிலான காலக்கட்டத்தில் அனிதா மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
இந்த வழக்கை தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைக்கக் கோரி அமலாக்கத்துறை, கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையானது, 80 சதவீதம் முடிவடைந்துள்ளதால், இதில் அமலாக்கத் துறையைச் சேர்த்துக் கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 23ஆம் தேதி தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாததைத் தொடர்ந்து வழக்கை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, செப்டம்பர் 13ஆம் தேதி மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், குற்றம் சாட்டப்பட்டவா்களில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சகோதரர் சிவானந்தம் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாவட்ட நீதிபதி செல்வம், விசாரணையை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டாா்.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கு மனு மீதான விசாரணை தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் முன்னிலையில் இன்று (நவ.10) விசாரணைக்கு வர இருந்த நிலையில், நீதிபதி செல்வம் விடுப்பு காரணமாக, மாவட்ட நீதிமன்ற 2வது கூடுதல் (பொறுப்பு) நீதிபதி பிலிப் நிக்கோலஸ் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், விசாரணையை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பிலிப் நிக்கோலஸ் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மேட்டுப்பாளயம் டூ ஊட்டி மலை ரயில் சேவை 7 நாட்களுக்கு ரத்து!