தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க பேராலயங்களில் பசலிக்கா பெருமை பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் மிக பிரசித்திப் பெற்றதாகும். ஏழு கடல்துறை அடைக்கலத்தாய் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தின் 437ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திவ்விய நற்கருணை பவனி விழா மிக கோலாகலமாக நடைபெற்றது. இந்த திவ்ய நற்கருணை பவனியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
ஆலய வளாகத்திலிருந்து புறப்பட்ட இந்த திவ்ய நற்கருணை பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பனிமய மாதா பேராலயத்தை வந்தடைந்தது. பின்னர் திவ்ய நற்கருணை பேழையானது ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக மேடைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு பேராயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் நற்கருனை ஆசிர் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி பனிமய மாதா பேராலய பெருவிழா நடைபெறுகிறது. அன்றையதினம் காலையில் தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.