விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிப்ரவரி 22ஆம் தேதி திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'தேசம்காப்போம்' பேரணி நடைபெறவுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று கோரிக்கைவிடுத்தும் இந்தப் பேரணி நடைபெறுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இணைந்து பிப்ரவரி 2ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 8ஆம் தேதிவரை கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறோம். இந்தக் கையெழுத்து படிவங்கள் அனைத்தையும் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க இருக்கிறோம்.
மோடி அரசு மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது என்று பொருள் இல்லை. ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது. இந்தச் சட்டத்தை திரும்பப் பெறும்வரையில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து போராடுவோம்.
ரஜினி பின்னணியில் சங்பரிவார்?
பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் அடையாளங்களைச் சிதைப்பது, சிலைகளை உடைப்பது, அவமதிப்பது போன்ற நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சங்பரிவார் அமைப்புகளின் தூண்டுதலால் இத்தகைய செயல்கள் அதிகரித்துவருவதாகத் தெரிகிறது. இதன் பின்னணியில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் உள்ளன.
சிலைகளை அவமதிக்கும் செயலை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. இதைத் தடுப்பதற்காக இதற்கென தனியே உளவுப்பிரிவு உருவாக்க வேண்டும். தனிக்காவல்படை ஒன்றை உருவாக்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பெரியாரை பேசியதன் பிண்ணனியில் சங்பரிவார் அமைப்புகள் உள்ளதாகச் சந்தேகப்படுகிறோம்.
டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரத்தில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இல்லாமல் இவ்வளவு துணிச்சலாக இந்த ஊழல் முறைகேடுகள் இந்த நிறுவனத்தில் நடந்திருக்க வாய்ப்பில்லை. டி.என்.பி.எஸ்.சி. தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நீதி விசாரணை நடத்திட முதலமைச்சர் ஆணையிட வேண்டும். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ரஜினி குறிப்பிட்ட 'அந்த' ஊர்வல செய்தியை மீண்டும் பிரசுரித்த துக்ளக்!