தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித் திருவிழா நேற்று (ஆக 24), கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தொடர்ந்து திருவிழா கொடிப்பட்டமானது திருக்கோயிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்தடைந்தது.
தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், பன்னீர், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல வகையான அபிஷேகம் மற்றும் அலங்காரம், மகாதீபாராதனைகள் நடைபெற்றன. பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10ஆம் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற செப். 1-ஆம் தேதி காலை தேரோட்டம் நடைபெற இருக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர். மேலும், ஆகஸ்ட் மாதம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை என்னும் பணியானது கோயில் வசந்த மண்டபத்தில் வைத்து இன்று (ஆக 25) நடைபெற்றது. இதில் 2 கோடியே 66 லட்சத்து 64 ஆயிரத்து 548 ரூபாயும், ஆயிரத்து 200 கிராம் தங்கம், 22 கிராம் வெள்ளி, 572 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்டியல் எண்ணும் பணியில் அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன், இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் கார்த்திக், உதவி ஆணையர் சங்கர், ஆய்வர் செந்தில்நாயகி, பதினெண்சித்தர் மடம் பீடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணிக்குழு, ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப் பணிக்குழு, பொதுமக்கள் பிரதிநிதிகள் இரா.மோகன், ச.கருப்பன், அயல்பணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கோயில் உண்டியல் 100 கோடி காணிக்கை செலுத்திய பக்தர் - ஆடிப்போன கோவில் நிர்வாகம்!