தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்கு குமாரபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தலைமை ஆசிரியராக மங்கையர்கரசி என்பவரும், உதவி ஆசிரியராக ரத்தினமாலா என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பள்ளியில் 23 மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்குள்ள கட்டிடம் பழமையானதைத் தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டப்பட்டுக் கடந்த 2005ஆம் ஆண்டு திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இதில், 2 வகுப்பறைகள், ஒரு தலைமை ஆசிரியர் அறை ஆகியவை உள்ளன. இந்த கட்டிடம் அருகே சமையலறையும் உள்ளது. மேலும், இந்த பள்ளி வளாகத்தில் பழைய வகுப்பறை, சமையலறை கட்டிடங்கள் இடிக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாகப் பள்ளியின் இடப்பக்க சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதையடுத்து பள்ளியில் போதிய பாதுகாப்பு இல்லை, மேலும், இந்த பள்ளியில் வடக்கு குமாரபுரம், நடு குமாரபுரம் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் தான் அதிகளவில் பயின்று வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு வரும் காட்டுப்பாதையும் பாதுகாப்பாக இல்லை. எனவே, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தெற்கு குமாரபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை வடக்கு குமாரபுரத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் அல்லது ஊத்துப்பட்டியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியுடன் இணைக்க வேண்டும் எனப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாகக் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தற்போது வரை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், அகில பாரத இந்து மகா சபா மாவட்டச் செயலர் முத்துக்குமார் தலைமையில் மாவட்டத் தலைவர் சங்கர் ராஜா, மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, நகரச் செயலர் ஹரி கிருஷ்ணன், நிர்வாகிகள் பீமா பாரதி, பாண்டி, சமூக ஆர்வலர் லட்சுமணன் மற்றும் அப்பள்ளியில் பயிலும் குமாரபுரம் காலணி பகுதி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து முழக்கமிட்டனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய் தலைமையில், வட்டாட்சியர் லெனின், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மேரி டயானா ஜெயந்தி, வட்டார கல்வி அலுவலர் பத்மாவதி, ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேஷ் குமார் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சு வார்த்தையின் போது, கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், காலணி பகுதி மாணவ, மாணவிகள் பள்ளிக்குப் பாதுகாப்பாகச் செல்வதற்கு ஏதுவாக வாகன ஏற்பாடு செய்து தருவதாகவும், பெற்றோர்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரின் மூலம் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுப்பதாகவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பைக் கவனத்தில் கொண்டு இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் கேட்டுக்கொண்டார். இதை அடுத்து சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை இடமாற்றம் செய்ய வேண்டும் எனப் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் கைது.. கோவில்படியில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!