தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சுதாகர். இவர் தனது காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த திருமணமான பெண் ஒருவரின் கைபேசி எண்ணை அவரது புகாரில் இருந்து எடுத்து போன் செய்து "வீட்டிற்கு வரவா" என்று இரட்டை அர்த்தத்தில் பேசி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதனால் அப்பெண், எஸ்.ஐ சுதாகர் தனக்கு அடிக்கடி போன் செய்து அசிங்கமாக பேசுகிறார் என்று தனது கணவரிடம் கூறியுள்ளார். இதுபற்றி அப்பெண்ணின் கணவர், உதவி ஆய்வாளர் சுதாகரிடம் சென்று இதுபோன்று தன் மனைவியை தொந்தரவு செய்யாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு எஸ்.ஐ சுதாகர் உன்னை கைது செய்து உள்ளே வைத்துவிடுவேன் என அவரை மிரட்டியுள்ளார்.
இதையும் படிங்க: Pocso: 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 64 வயது முதியவருக்கு 95 ஆண்டுகள் தண்டனை
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மனமுடைந்த அப்பெண்ணும், அவரது கணவரும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் நேரில் சென்று புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உடனடியாக விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதாகரை, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
மேலும், கடந்த 2 தினங்களுக்கு முன்புதான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனால், உதவி ஆய்வாளர் சுதாகருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்போது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி வாயிலாகவே சுதாகர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தினசரி நாளிதழ், பத்திரிகை என எதைத் திறந்தாலும் பாலியல் சார்ந்த செய்திகளை கடக்காமல் பக்கங்களை புரட்ட முடியாது. பாலியல் சார்ந்த வழக்குகளும், புகார்களும் ஒரு நாளைக்கு இவ்வளவு என விரல் விட்டு எண்ண முடியாத அளவில் பெருகி உள்ளது. பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களே என்றாலும், அதை துணிச்சலுடன் எதிர்கொள்வது மற்றும் புகார் அளிப்பது குறைவான விகிதமே.
ஆனால் அதையும் தாண்டி வெளியே சொல்லும் பெண்கள் பல வகையில் இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இத்தகைய நிலைப்பாடுகளில் இருந்து பெண்களை பாதுகாக்க காவல்துறையினர் உள்ளனர் என நம்பி தங்கள் குறைகளை சொல்லும் பெண்களுக்கு, காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் பெரும் வேதனையை அளிக்கிறது.
புகார் அளிக்க வந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு இரட்டை அர்த்தத்தில் பேசிய காவலரின் செயல், காவல் துறைக்கே களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஆன்லைனில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்; உத்தரபிரதேச இளைஞரை கைது செய்த ஹைதராபாத் போலீஸ்