தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன்(35). நிலம் தொடர்பாக இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் திருமணவேல் என்பவருக்கும் இடையே விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த செப்.17ஆம் தேதி செல்வன் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி டி.எஸ்.பி. அணில்குமார் தலைமையிலான காவல்துறையினர், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சின்னத்துரை, முத்துராமலிங்கம், சரணடைந்த திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகிய நான்கு பேரை கடந்த 30ஆம் தேதி முதல் அக்.6 ஆம் தேதி வரை காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சேர்ந்த பேச்சி(43), கருப்பசாமி(46) ஆகிய இருவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், திருமணவேல், பேச்சி, கருப்பசாமி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த 16ஆம் தேதி கோவில்பட்டி நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் மனு தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, மூன்று பேரும் கோவில்பட்டி நீதித்துறை குற்றவியல் நடுவர் பாரதிதாசன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். பேச்சி, கருப்பசாமி ஆகிய 2 பேருக்கு அக்.21ஆம் தேதி வரை சிபிசிஐடி காவலுக்கு அனுமதி வழங்கினார். அவர்கள் 21 ஆம் தேதி மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். திருமணவேலுவை பேரூரணி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சென்னைப் பல்கலைக் கழகத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க ஒப்புதல்