தூத்துக்குடி: ஓட்டப்பிடாரத்தில் மெக்குவாய் கிராமிய மேல்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் இந்த பள்ளியில் தூத்துக்குடி கே.டி.எஸ். நகரைச் சேர்ந்த செல்வராணி (47) தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். நேற்று மாலையில் செல்வராணி, அப்பள்ளியில் பணிபுரியும் ரமுணா என்ற ஆசிரியருடன் இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள புதியம்புத்தூருக்கு சென்றுள்ளார்.
அப்போது செல்வராணி தனது கையில் வைத்திருந்த கைப்பையை தவறவிட்டதாக கூறப்படுகிறது. அந்த பையில் தங்க கம்மல், நெக்லஸ் என சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை வைத்திருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வராணி ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் செல்வராணியின் நகை காணமால் போன விஷயம் பள்ளி முழுவதும் பரவி உள்ளது.
இந்நிலையில் ஓட்டப்பிடாரம் இந்திரா நகரைச்சேர்ந்த சிவக்குமார் என்பவரது மனைவி முத்துச்செல்வி வீட்டிற்கு வரும் போது கீழே கிடந்த கைப்பை ஒன்றை எடுத்து பார்த்துள்ளார். அதில் தங்க நகை இருந்துள்ளது. வீட்டிற்கு வந்த முத்துச்செல்வி கீழே கிடந்த கைப்பை குறித்தும், அதனை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அப்போது மெக்குவாய் கிராமிய மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் செல்வராணியின் மகள் மதிஷா, தனது தலைமை ஆசிரியை நகையுடன் இருந்த கைப்பையை தவறவிட்டது குறித்து தெரிவித்துள்ளார். இதையெடுத்து முத்துலட்சுமி, தலைமை ஆசிரியர் செல்வராணிக்கு தகவல் தெரிவித்தது மட்டுமின்றி, நகைகளுடன் இருந்த கைப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் உரிய விசாரணை நடத்தி நகையை தலைமை ஆசிரியை செல்வராணியிடம் கொடுத்தது மட்டுமின்றி, கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் நகைகள் கொண்ட கைப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முத்துலட்சுமி மற்றும் 7ம் வகுப்பு படிக்கும் மகள் மதிஷா ஆகியோரை போலீசார் பாராட்டியதுடன் காவல் துறை சார்பில் ரூ.2 ஆயிரம் வழங்கினர்.