தூத்துக்குடி சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை-மகன் ஜெயராஜ் (56), ஃபென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணை கைதிகளாக கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதில், சந்தேகத்திற்கிடமான முறையில் தந்தை-மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இருவரின் சாவுக்கும் சாத்தான்குளம் காவல் துறையினர் விடிய, விடிய அடித்து துன்புறுத்தியதே காரணம் என்று கூறப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து இதில் தொடர்புடைய காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டும், காவல் ஆய்வாளர் உள்பட மற்ற காவலர்கள் அனைவரும் வேறு இடங்களுக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டும் உத்தரவிடப்பட்டது.
கைதிகளின் மரணம் குறித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்திவருகின்றது. நீதிமன்ற உத்தரவுப்படி சிறை மரணம் குறித்து கோவில்பட்டி ஜே.எம். 1 நீதித் துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை நடத்திவருகிறார்.
இந்நிலையில் வியாபாரிகள் இருவரும் காவல் நிலையத்தில் துன்புறுத்தப்பட்டதை உறுதிப்படுத்தும்வகையில், இது குறித்து காவலர் இருவர் உரையாடிக் கொள்ளும் ஆடியோ ஒன்று வெளியாகி, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் ஆயிரத்தை நெருங்கும் கரோனா உயிரிழப்பு!