சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
நெல்லை சிபிசிஐடி காவல்துறை கண்காணிப்பாளர் அனில் குமார் தலைமையிலான காவல் துறையினர் நேற்று (ஜூலை 1) சாத்தான்குளத்தில் தங்களது விசாரணையை தொடங்கினர்.
12 குழுக்களாக பிரிந்து ஜெயராஜின் வீடு, கடை, பொதுமக்கள், உறவினர்கள், சாட்சியங்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், காவல் நிலைய காவலர்கள் ஆகியோரிடமும், கோவில்பட்டி கிளைச்சிறை, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது, சிபிசிஐடி ஐஜி சங்கர், காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் சாத்தான்குளத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தநிலையில் வியாபாரிகள் இறந்தது தொடர்பான வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். அதன்படி சாத்தான்குளம் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள், முத்துராஜ், முருகன் உள்ளிட்ட நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு கோவில்பட்டி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் பணிகளில் சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரம் காட்டினர். அதன்பேரில் நாங்குநேரியில் பதுங்கியிருந்த உதவி ஆய்வாளர் ரகு கணேசை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் தூத்துக்குடி சிபிசிஐடி முகாம் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
அவரிடம் சிபிசிஐடி ஐஜி சங்கர் விசாரணை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கோவில்பட்டியில் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்துவதற்காக இரவு 12.10 மணி அளவில் அழைத்து செல்லப்பட்டு, தற்போது பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணனையும் தலைமை காவலர் முருகனையும் காவல் துறையினர் இன்று (ஜூலை2) காலை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சிபிசிஐடி ஐஜி சங்கர் கூறுகையில், “சாத்தான்குளம் விவகாரம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளோம். இந்த வழக்கில் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க...சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ கைது