தூத்துக்குடி சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வணிகர்கள் இருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சாத்தான்குளம் காவல்துறையினர்தான் அவர்களை அடித்து கொலை செய்ததாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இச்சம்பவத்திற்கு கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இச்சம்பவம் தெடர்பாக காவல் துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், "ஜூன் 19ஆம் தேதி இரவு காவலர்கள் ரோந்து சென்றபோது ஜெயராஜின் கடை முன்பு சிலர் கூட்டமாக நின்றிருந்தனர்.
அவர்களை காவலர்கள் கலைந்து போகச் சொன்னதற்கு ஜெயராஜ் தகாத வார்த்தையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த பென்னிக்ஸும் காவல் துறையினரை தகாத வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் தரையில் உருண்டு புரண்டதில் தந்தை, மகனுக்கு ஊமைக்காயம் ஏற்பட்டது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என நிரூபிக்கும் வகையில் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியின்படி, ஜெயராஜின் செல்போன் கடை முன்பு காவலர்கள் கூறியது போல் கூட்டங்கள் எதுவும் இல்லை. அவ்வழியே ரோந்து வந்த காவல்துறையினரின் வாகனம் தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதிலிருந்து இறங்கிய காவலர் ஜெயராஜை அழைக்க, அவர் காவல்துறையினரின் வாகனத்தை நோக்கிச் செல்கிறார். இதைத்தொடர்ந்து அவரை காவலர்கள் இழுத்துச் செல்கின்றனர். இதனிடையே பென்னிக்ஸ் தனது தந்தையை காவலர்கள் அழைத்துச் செல்வதைப் பார்த்து அவரும் காவலர்களை நோக்கி ஓடுகிறார். இந்தக் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதன்மூலம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொய் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 27 காவலர்கள் நியமனம்!