தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் நேற்று (செப்.27) மிகச்சிறிய அளவிலான, மெல்லிய உடலமைப்பு கொண்ட பாம்பு ஒன்று சாலையைக் கடக்க முயற்சி செய்துள்ளது. அப்போது அதனைக் கண்ட அப்பகுதி மக்கள், வித்தியாசமாக காணப்பட்ட இந்த பாம்பைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக அந்த பாம்பை பிடித்து பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஊர்மக்கள் ஒப்படைத்துள்ளனர். பின்னர் இந்த பாம்பை அடையாளம் கண்ட உயிரின ஆராய்ச்சியாளர்கள், இது இந்தியாவிலேயே மிக அரிய வகை பாம்பான "நாணல் பூச்சி பவளப்பாம்பு" என்றும், இதன் மொத்த வளர்ச்சியே இவ்வளவுதான் என்றும் தெரிவித்துள்ளனர்.
மிகச்சிறிய அளவில் மெல்லிய உடல் அமைப்பு கொண்ட இந்த நாணல் பூச்சி பவளப்பாம்பு, நல்ல பாம்புவிற்கு இருக்கும் அதே அளவு கொடூர விஷத்தன்மை கொண்டது. இது எண்ணிக்கை அடிப்படையில் மிகக்குறைவாக உள்ள பாம்பு வகையைச் சேர்ந்ததாகவும், அதிக ஈரப்பதமான பகுதிகளில் மட்டுமே வாழக்கூடியவை என்றும் தெரிவித்தனர்.
பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நாணல் பூச்சி பவளப்பாம்பை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இந்த நாணல் பூச்சி பவளப்பாம்பு பார்ப்பதற்கு மெல்லிய நிலையிலும், தலை மற்றும் உடம்பின் கடைசி பகுதியில் மட்டும் கரு நிறத்தைக் கொண்டிருக்கும் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி! ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு தொற்று பாதிப்பு!