தூத்துக்குடி: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று (டிச.9) நெல்லையில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், '2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும். அதற்கான பொறுப்பாளர்களை இன்று அறிவிக்கின்றேன். சென்னையில் மழையால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் ஆகியும் கூட, நம்மால் பல மாநிலங்களில் அடிப்படை வசதிகள் முழுமையாக செய்ய முடியவில்லை. சென்னையைப் பொருத்தவரை, குறை கூறவில்லை என்றாலும்; நிறைவாக இல்லை என்று சொல்லும் நிலைமை தான் ஏற்பட்டிருக்கிறது.
அதேபோல், மக்கள் படுகின்ற வேதனையின் நடுவே அவர்கள், யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாம் உதவலாம் என்று நினைத்தால் கூட, வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத சூழ்நிலைதான் உருவாகியுள்ளது. மிகப்பெரிய இழப்பை மக்கள் சந்தித்து கொண்டிருக்கிறார்கள்.
இதுபோன்ற நிலைமை தொடராமல் இருப்பதை எப்படி என்பதை கண்டறிந்து, அரசு அதில் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிடர் மீட்புக்காக மிகப்பெரிய படையையே உருவாக்க வேண்டும் என்ற அறிக்கை கொடுத்திருக்கின்றேன். மக்களின் இந்த வேதனை புரிகிறது. இந்த வேதனையிலும் அதனை சகித்துக்கொண்டு எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இந்த எதிர்ப்பை தேர்தல் களத்தில் காண்பிக்க மறுக்கிறார்கள்' என்று குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர், 'தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிப்பு அடையும் அளவிற்கு மிகப்பெரிய பாதிப்பில்லை. தென் மாவட்டங்களை பார்க்கும்போது, அண்மையில் பல கொலைகள் நடந்துள்ளன என்பது வேதனை தருகிறது. தொழில்வளத்தை தென் மாவட்டங்களில் உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: முன்னாள் கால்பந்து வீரர் ஓலே குன்னர் சோல்ஸ்கேர் இந்தியச் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு..!