தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்து ஆங்காங்கே தீவு போல் காட்சியளிக்கிறது.
தூத்துக்குடியில் பெய்த கனமழையால், அப்பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி உடைந்ததால், வெள்ள நீரானது குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கனமழையால் கிராமங்களின் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு தனித்தீவாகப் பல கிராமங்கள் உள்ளன.
இந்த நிலையில், இந்த வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமான மூலம் இன்று (டிச.21) தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் பகுதியில் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து தற்போது வரை அரசு அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் உள்ளே செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. மழை ஓய்ந்து மூன்று நாளாகியும், தற்போது வரை புன்னக்காயல், சேர்ந்தமங்கலம் போன்ற பகுதிகள் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ள இயலாத பகுதியாக இருந்து வருகிறது. மேலும், புன்னக்காயல் கடலில் தான் தாமிரபரணி ஆறு கலக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராமநாதபுரத்திலிருந்து ஏராளமான மீனவர்கள் கடல் மார்க்கமாகப் படகு மூலம் சுமார் 5 மணி நேரம் பயணம் செய்து தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக வருகை புரிந்து நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனர். மேலும், நெல்லை மாவட்டம் உவரி பகுதியிலிருந்தும், புன்னக்காயல் மக்களுக்கு மீனவர்கள் கடல் மூலமாக வருகை புரிந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த வீடியோக்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம்: உடந்தையாக இருந்த பெண் அதிகாரி உட்பட 2 பேர் கைது.. !