தூத்துக்குடி: வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தூத்துக்குடி மாவட்டத்தில் புதூர் பாண்டியாபுரம் என்னும் இடத்தின் அருகில் இயங்கி வந்தது. ஆலையை மூட வேண்டும் என்கிற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. ஆனால் 2018-ஆம் ஆண்டு ஆலை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் எழுந்தது.
பின்னர் ஸ்டெர்லைட் ஆலையால் நீர், நிலம், காற்று மாசுபடுவதாக கூறி, ஆலையை நிரந்திரமாக மூட வேண்டும் என போராட்டம் வீரியம் அடைந்தது. தூத்துக்குடி, அதனை சுற்றியுள்ள பல கிராமங்களிலும் போராட்டம் நடைபெற்றது. நூறு நாட்களை நெருங்கிய நிலையிலும் போராட்டம் அமைதியான முறையிலேயே நடந்து வந்தது.
2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி போராட்டத்தின் நூறாவது நாளன்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்து இரண்டு ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்த இருவர் உயிரிழந்தனர்.
இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 22ஆம் நாள் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்துவதற்கு போலீசாரிடம் முன் அனுமதி கோரி இருந்தனர்.
முத்து நகர் கடற்கரையில் அஞ்சலி செலுத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர். மேலும் 5ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை ஒட்டி பல இடங்களில் அனுமதி அளித்து இருந்தனர். போலீசார் அனுமதி அளித்த இடங்களில் பொதுமக்கள் கூடி அஞ்சலி செலுத்தினர். மேலும், தூத்துக்குடி பாத்திமா நகரில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உருவப்படத்திற்கு பாத்திமா நகர் பொதுமக்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி லூர்த்தமாள்புரத்தில் நடந்த நினைவஞ்சலியில் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு அமைப்பினர், இறந்தவர்களின் திருவுருவ படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 5ஆவது ஆண்டு நினைவு தினத்தினையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுப்படி தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 2200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தூத்துக்குடி மாநகரில் 53 மதுபான கடைகளும், பார்களும் மூடப்பட்டுள்ளது.
மேலும், திமுக அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு 5 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை. உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை சிறப்பு சட்டம் இயற்றி அகற்ற வேண்டும். அருணா ஜெகதீசன் ஆணையத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.