தென்காசி: கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (37). இவர் மீது தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலையத்தில் மூன்று திருட்டு வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக கடந்த 16ஆம் தேதி பாலமுருகனை, தனிப்படை காவலர்கள் கைதுசெய்து, பேரூரணி சிறையில் அடைத்தனர்.
விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 23ஆம் தேதி பாலமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பாலமுருகன் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.
அவர், பல்வேறு திருட்டு வழக்குகளிலும் தொடர்புடையவர் என்பதால், தப்பிவிடாமல் இருக்க பாலமுருகன் சிகிச்சைப் பெற்றுவந்த வார்டில் காவலர்கள் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
![தப்பியோடிய கைதி பாலமுருகன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-01-gh-accused-escape-vis-script-tn10058_25082021111042_2508f_1629870042_880.jpg)
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 25) அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் கழிவறைக்குச் சென்று வருவதுபோல் நடித்து அங்கிருந்து பாலமுருகன் தப்பியோடிவிட்டார். இது குறித்து தென்பாகம் காவலர்கள் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
காவல் துறையினரின் காவலில் இருந்தபோதே கைதி தப்பியோடிய சம்பவம், அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோவில் கைது!'