தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, கயத்தாறு ஒன்றியப் பகுதிகளான சன்னதுபுதுக்குடி, தெற்கு கழுகுமலை பகுதிகளில் நடமாடும் நியாயவிலைக் கடை வாகனத்தை தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட ஒன்றியக் குழுத்தலைவர் சத்யா, கவுன்சிலர் பிரியா, கயத்தாறு ஒன்றிய செயலர் வினோபாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, "பாஜகவும், மக்களும் தன்னை ஒதுக்கி விட்டதாக எண்ணி பொன்.ராதாகிருஷ்ணன் விரக்தியில் உள்ளார் என்பது அவர் பேசுவதை பார்க்கும் போது தெரிகிறது. அதை யாரும் கருத்தில் கொள்ள வேண்டாம்.
கூட்டணி பற்றி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் முருகன், அரசின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளார். கூட்டணி தொடரும் எனத் தெரிவித்துள்ளார். எனவே கூட்டணி குறித்த பொன்.ராதாகிருஷ்ணனின் பதில் சரியாக இருக்காது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக, காவிரி நீர், முல்லைப் பெரியாறு, நெய்வேலி என்எல்சி பங்கு விற்பனை, ஜல்லிக்கட்டு மீட்பு என பல்வேறு பிரச்சினைகளுக்காக நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால் திமுக, காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்கவில்லை. கச்சதீவை தாரை வார்த்தனர். அதிகாரத்தில் இருந்தபோது எதையும் செய்யமால், தற்போது அரசியலுக்காக பேசி வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் வேட்பாளர், சசிகலா வருகை குறித்து பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ