மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடையே இன்று உரையாடிய பிரதமர் மோடி தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் முடிதிருத்தும் தொழிலாளியான பொன்.மாரியப்பனிடம் உரையாடினார்.
யார் இந்த பொன்.மாரியப்பன்?
தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் பொன். மாரியப்பன். இவருக்கு இந்திரா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். 8ஆம் வகுப்புக்கு மேல் பள்ளி செல்லாத பொன். மாரியப்பன், தூத்துக்குடி வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்துள்ளார். அப்போது வழக்கறிஞர், படிப்பின் முக்கியத்துவத்தையும் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் சொல்ல, படிக்க இயலாததை நினைத்து மாரியப்பன் மன வேதனை அடைந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தனது தந்தை செய்து வந்த முடிதிருத்தும் தொழிலை கையிலெடுத்த பொன். மாரியப்பன், அவர் வசித்த பகுதியில் சலூன் கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார். அப்படி இவர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் பெரும்பாலும் செல்போனிலும் வாட்ஸ்அப்பிலும் மூழ்கிக் கிடப்பதைக் கண்டுள்ளார். வாடிக்கையாளர்களின் மனதை படிப்பின் அவசியத்தை அறிந்துகொள்ள தனது கடையில் நூலகத்தை அமைத்துள்ளார் பொன்.மாரியப்பன்.
கடையில் அரசியல் வேண்டாம் என்பதை நாசூக்காக வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கும் பொன்.மாரியப்பன், வாசிப்பின் மூலம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அறிமுகத்தை பெற்றுள்ளார். பின்னர் புத்தகங்களே துணை என்ற தலைப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் பேசிய ஒலிப்பதிவை சலூனில் ஒலிப்பரப்பிய பொன்.மாரியப்பன், தொடர்ந்து சுகி.சிவம், நெல்லை கண்ணன், தமிழருவி மணியன், பர்வீன் சுல்தானா ஆகியோரின் சொற்பொழிவுகளை தவறாமல் ஒலிபரப்பி வருகிறார்.
தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நூலகம் குறித்தும், என்ன புத்தகம் படித்தீர்கள் உபயோகமானதாக இருந்ததா என்பதை கையேடு மூலம் பதிவிடவும் செய்கிறார்.
அதுமட்டுமின்றி தனது சலூனில் அரசியல் தலைவர்களின் படத்தை தவிர்த்து திருவள்ளுவர், அப்துல்கலாம், மகாத்மா காந்தி, விவேகானந்தர், மகாகவி பாரதி என தமிழ், அறிவியல், தேச தலைவர்களின் புகைப்படங்களை வைத்துள்ளார். மேலும் பூஜை காலங்களில் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் விதமாக பூஜைகள் செய்யும் இவர், கடவுள்களின் படத்தோடு அப்துல்கலாமின் படத்தையும் வைத்து பூஜை செய்கிறார்.
மோடி பாராட்டு
இந்நிலையில், இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக பொன். மாரியப்பனிடம் பிரதமர் மோடி உரையாடினார், வணக்கம் நல்லா இருக்கீங்களா? என பொன். மாரியப்பனிடம் தமிழில் நலம் விசாரித்து விட்டு, அவரிடம் உரையாடத் தொடங்கினார். பின்னர் முடி திருத்தகத்தில் நூலகம் அமைக்கும் எண்ணம் எப்படி வந்தது? என்றார்.
அதற்கு பதிலளித்த பொன்.மாரியப்பன், நான் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்ததால் வாழ்க்கையை படிக்க நூலகம் அமைத்தாக தெரிவித்துள்ளார். பிரதமர் தங்களுக்கு பிடித்த புத்தகம் குறித்து கேட்டதற்கு, திருக்குறள் எனக்கு பிடித்த புத்தகம் என்று பொன்.மாரியப்பன் தெரிவித்துள்ளார். சலூன் கடையில் நூலகம் அமைத்த முயற்சிக்காக பொன்.மாரியப்பனை பிரதமர் வெகுவாக பாராட்டினார்.
இது கூறித்து ஈடிவி பாரத்திற்கு பேட்டியளித்த மாரியப்பன், பிரதமரின் வாழ்த்து உற்சாகப்படுத்துவதாக இருந்தது என நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க...'என் சார்பாக இந்தப் புத்தகங்கள் பேசும்' - அசத்தும் சலூன் கடைக்காரர்!